

பனாஜி: 4 வயது மகனை கொலை செய்த விவகாரத்தில் மருத்துவப் பரிசோதனை செய்ததில் பெங்களூருவைச் சேர்ந்த சுசானா சேத்துக்கு எந்தவிதமான மனநோயும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் சுசானா சேத். இவரது கணவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் சுசானாவிடமிருந்து பிரிந்து இந்தோனேசியாவில் வசித்து வருகிறார். சுசானா தனது மகனுடன் பெங்களூருவில் வசித்து வந்தார். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஏஐ ஆய்வுக்கூட நிறுவனத் தலைமை நிர்வாகியாகவும் இருந்து வருகிறார் சுசானா சேத். இந்நிலையில், கோவாவில் ஒரு ஓட்டலில் தனது 4 வயது மகனை கொன்று சூட்கேசில் எடுத்து சென்ற சுசானா சேத் போலீஸாரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
சுசானா சேத் தனது மகனுக்கு அதிக அளவில் இருமல் டானிக்கொடுத்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சுசானா சேத்துக்கு கோவாவில் மனநலம் தொடர்பான ஆய்வும், பரிசோதனையும் செய்யப்பட்டது.அதன்படி அவருக்கு எந்தவிதமான மனநோயும் இல்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுசானா சேத், தனது குழந்தையை கொலை செய்தது தொடர்பான வழக்கு கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்த நீதிமன்றத்தில் சுசானாவின் தந்தை ஒரு மனுவை கடந்த மாதம் தாக்கல் செய்திருந்தார். சுசானாவுக்கு மனநோய் இருக்கலாம் என்றும் அதுதொடர்பாக ஆய்வு செய்து மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு கோவா பனாஜியிலுள்ள குழந்தைகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கோவா போலீஸார், நீதிமன்றத்தில் ஒரு மருத்துவ அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.
அதில், சுசானாவுக்கு மனநலம் தொடர்பான பிரச்சினை ஏதாவது இருக்கிறதா என்றும், அதுதொடர்பாக மருத்துவர்கள் பரிசோதனை நடத்தியதில் அவருக்கு எந்தவிதமான மனநோயும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மருத்துவப் பரிசோதனையின்போது டாக்டர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுசானா சேத் தெளிவான பதில்களை அளித்தார். இந்த மருத்துவ பரிசோதனை பாம்போலிம் பகுதியிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் சைக்கியாட்ரி அன்ட் ஹியூமன் பிஹேவியர் (ஐபிபிஎச்பி) மையத்தில் நடைபெற்றது.
கேட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்களை, மிகவும் நிதானத்துடனும், பகுத்தறிவாகவும் அவர் அளித்துள்ளார். மேலும் தனது குழந்தையைக் கொன்றதால் தான்இறக்க வேண்டும் என்றோ, தற்கொலை செய்துகொள்வேன் என்றோ குறிப்பிடவில்லை. அவருடைய பதில்களில் இருந்து அவருக்கு எந்தவிதமான மனநோயோ அல்லது பரவலான மனநிலை அறிகுறிகளோ தெரியவில்லை. மேலும் தனக்கு எந்தவிதமான நோயும் இல்லை என்றும் அவரே தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.