Published : 14 Feb 2024 07:07 AM
Last Updated : 14 Feb 2024 07:07 AM
இந்தூர்: யாசகம் எடுத்து 45 நாட்களில் ரூ.2.5 லட்சம் சம்பாதித்த இந்தூர்பெண்ணை போலீஸார் கைதுசெய்தனர். தனது 5 குழந்தைகளையும் யாசகம் எடுக்குமாறு நிர்பந்தம் செய்ததற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் இந்திராபாய். இவருக்கு கணவர், 5 குழந்தைகள் உள்ளனர். இவர் இந்தூரின் முக்கியசாலைகள், சாலை சந்திப்புகள், போக்குவரத்து நெருக்கம் நிறைந்தசிக்னல் பகுதிகளில் பிச்சை எடுத்து சம்பாதித்து வருகிறார். இவர் மட்டுமல்லாமல் தனது 5 குழந்தைகளையும் யாசகம் எடுத்து பணம் ஈட்டுமாறு அவர் நிர்பந்தித்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட இவர் அபராதமும் கட்டியுள்ளார். கடைசியாக இவர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் ரூ.19 ஆயிரம் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சன்ஸ்தா பிரவேஷ் என்ற அரசுசாரா அமைப்பினர் புகார் கொடுத்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது போலீஸாருடன் அவரும், அவரது 7 வயது மகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த அமைப்பின் தன்னார்வலரான ரூபாலி ஜெயின் கூறியதாவது:
இந்திராபாய்க்கு முக்கிய தொழிலே யாசகம் எடுப்பதுதான். அவர் யாசகம் எடுத்தே 2 மாடி வீடு கட்டியுள்ளார். கோட்டா பகுதியில் சிறிதளவு விவசாய நிலம், மோட்டார் சைக்கிளை கணவருக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும்ரூ.20,000 மதிப்புள்ள செல்போனையும் அவர் பயன்படுத்துகிறார்.
கடைசியாக அவர் கைதாகும்போது அவர் கடந்த 45 நாட்களில் ரூ.2.5 லட்சத்தை சம்பாதித்ததாகத் தெரிவித்துள்ளார். இந்தூரில் சுமார்7,000 யாசகர்கள் உள்ளனர். இவர்களுக்கு கிடைக்கும் பணத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் தலைசுற்றுகிறது. இவர்களுக்கு ஆண்டுதோறும் சராசரியாக ரூ.20 கோடி கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து இந்திரா பாய் கூறும்போது, “பட்டினி கிடந்து சாவதை விட யாசகம் எடுப்பது மேல் என்று நினைத்தோம். திருடுவதை விட இது மேலானது. எனவே,நானும் எனது குழந்தைகளும் இந்தூரில் உள்ள பல்வேறு சாலை சந்திப்புகளில் பிச்சை எடுக்கிறோம். எனக்கு 10, 7, 8, 3, 2 வயதுகளில் குழந்தைகள் உள்ளனர். ஒவ்வொரு குழந்தையையும் ஒவ்வொரு சாலை சந்திப்பில் நிறுத்தி யாசகம் எடுப்பேன்.
உஜ்ஜைன் மகாகாள் கோயில்புனரமைப்புப் பிறகு இப்பகுதிக்கு வரும் பக்தர்கள் அதிகரித்துள்ளனர். முன்பு தினந்தோறும் 2,500 பேர் வருவர். தற்போது நாள்தோறும் 1.75 லட்சம் பக்தர்கள் உஜ்ஜைன் மகாகாள் கோயிலுக்கு வருகின்றனர். இதனால் எங்களுக்கு அதிக பணம் கிடைக்கிறது” என்றார். தற்போது கைதாகியுள்ள இந்திராபாய் வெளியே வந்ததும், மீண்டும் யாசகம் எடுப்பதாகவே தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT