

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்து தப்பிய இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை மயிலாப்பூரில் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலான கபாலீஸ்வரர் கோயில் உள்ளது.
இந்த கோயிலின் ராஜகோபுர பிரதான நுழைவு வாயிலில் கடந்த 6-ம் தேதி இரவு இளைஞர் ஒருவர் சில காகிதப் பொருட்களை கிழித்துப் போட்டு தீப்பற்றவைத்துவிட்டு சென்றார்.
அத்தீயானது கொழுந்து விட்டு எரிந்தது. அதிர்ஷ்டவசமாக கோயிலின் கதவு சேதம் அடையவில்லை. கோயிலின் முன்பு தீ எரிந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த விவகாரம் குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கபாலீஸ்வரர் கோயில் கண்காணிப்பாளர் பாலமுருகன் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக கோயில் சுற்றுப்புறங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், சம்பவத்தன்று இரவு 11.20 மணிக்கு கருப்பு கலர் சட்டை, லுங்கி அணிந்து கொண்டு சைக்கிளில் வந்த இளைஞர் கபாலீஸ்வரர் கோயில் கிழக்கு ராஜகோபுரத்தின் முன்பு வந்து பழைய காகிதங்களை சிறு துண்டுகளாக கிழித்து அதில் பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்து, சாமி கும்பிட்டு விட்டு மறுநாளான 7-ம் தேதி அதிகாலை 1.25 மணிக்கு அங்கிருந்து சைக்கிளில் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தப்பிய இளைஞரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றபோது இளைஞர் ஒருவர் பிடிபட்டார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் சென்னை அனகாபுத்தூர், சாந்தி நகர், 1-வது தெருவைச் சேர்ந்த தீனதயாளன் (31) என்பது தெரியவந்தது.
இவர்தான் கபாலீஸ்வரர் கோயில் முன் பெட்ரோல் ஊற்றி பேப்பரை எரித்தவர் எனவும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் என்ன காரணத்துக்காக பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார் என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.