Published : 13 Feb 2024 05:59 AM
Last Updated : 13 Feb 2024 05:59 AM

2 மகள்களுடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை: ஆன்லைனில் பணம் முதலீடு செய்து ரூ.31 லட்சம் இழந்ததால் விபரீத முடிவு

கோப்புப் படம்

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று முன்தினம் தனது 2 மகள்களுடன் ரயில் முன் பாய்ந்துபெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவர் ஆன்லைன் மோசடியில் ரூ.31லட்சத்தை இழந்ததால் விபரீதமுடிவை எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கும்பகோணம் பொன்னுசாமி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்(42). இவர், கோவையில் கட்டுமானத் தொழில் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி(40), தனியார் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவர்களது மகள்கள் ஆருத்ரா(11), சுபத்ரா(7).

இந்நிலையில், நேற்று முன்தினம் ஆர்த்தி தனது 2 மகள்களுடன் சுந்தரபெருமாள்கோவில்-உத்தாணி இடையே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக கும்பகோணம் ரயில்வே டிஎஸ்பி மகாதேவன் மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியது: ஆன்லைனில் பணம்முதலீடு செய்தால் இரட்டிப்பாகவழங்கப்படும் என இணையதளத்தில் வந்த விளம்பரத்தைப் பார்த்த ஆர்த்தி, அதிலிருந்த லிங்க் மூலம் பல்வேறு தவணைகளாக ரூ.30.99 லட்சம் செலுத்தியுள்ளார். ஆனால், அந்த விளம்பரத்தில் கூறியபடி பணம் இரட்டிப்பாக கிடைக்கவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட சைபர் க்ரைமில் புகார் அளித்தால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்குத் தெரிந்துவிடும் எனக் கருதி, கடந்த ஜன.24-ம் தேதி திருவள்ளூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், தன்னிடம் இருந்த நகைகள், சேமிப்புப் பணம்உள்ளிட்டவை குறித்து குடும்பத்தினர் கேட்டால், தான் ஆன்லைனில் பணத்தை இழந்தது தெரிந்துவிடும் என பயந்த ஆர்த்தி, தனது 2மகள்களுடன் ரயில் முன் பாய்ந்துதற்கொலை செய்துகொண்டுள்ளார். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

மற்றொரு சம்பவத்தில்... திருவிடைமருதூர் கட்டளைத்தெருவைச் சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி ரேவதி(50), மகள்மகேஸ்வரி(30) ஆகியோரும் நேற்று முன்தினம் திருவிடைமருதூர் ரயில் நிலையம் அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், ரேவதியின் கணவர் ராஜேந்திரன் உயிரிழந்துவிட்ட நிலையில், மனநிலை பாதிக்கப்பட்ட மகள் மகேஸ்வரியுடன் ரேவதி வசித்து வந்தார். இந்நிலையில், போதிய வருமானம் இல்லாததால் மகளிர் சுய உதவிக்குழுவில் வாங்கிய கடனை ரேவதியால் செலுத்த முடியவில்லை.மேலும், வருமானத்துக்கும் வழியில்லாததால், மகளுடன் ரயில்முன் பாய்ந்து ரேவதி தற்கொலைசெய்து கொண்டது தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x