Published : 13 Feb 2024 05:31 AM
Last Updated : 13 Feb 2024 05:31 AM
கோவை: கோவையை தலைமையிடமாகக் கொண்டு மை வி3 ஆட்ஸ் எனப்படும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் தினமும் ரூ.1,000 வரை (முதலீட்டுத் தொகைக்கு ஏற்ப) வருவாய் ஈட்டலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதை நம்பிய லட்சக்கணக்கானோர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதன் மூலம் கோடிக்கணக்கில் அந்நிறுவனம் பணம் திரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்களிடமிருந்து விதிகளை மீறி முதலீடு திரட்டியது தொடர்பாக தனியார் நிறுவன இயக்குநர் சக்தி ஆனந்தன் மீது மாநகர குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, சக்திஆனந்தன் மற்றும் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்த பலர், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 10-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சக்திஆனந்தன் உள்ளிட்ட 180 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், போலீஸாரை பணிசெய்யவிடாமல் தடுத்தல்,சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சக்திஆனந்தன் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரை சிறையில் அடைத்தனர்.
இந்த சூழலில், சக்தி ஆனந்தனுக்கு ஆதரவாக கடந்த 10-ம்தேதி இரவு ஆட்சியர் அலுவலகம் முன்பு சிலர் திரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியபோது, சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, போராட்டத்துக்கு தலைமை வகித்த தொண்டாமுத்தூர் அருகேயுள்ள வண்டிக்காரனூரைச் சேர்ந்த அருள்மணி(47), தென்னமநல்லூரைச் சேர்ந்த பிரவீன்(29), காளம்பாளையத்தைச் சேர்ந்த கணேசன்(37), என்.கே.பாளையத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி(54), தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தைச் சேர்ந்த சிவானந்த பெருமாள்(39) ஆகியோர் மீது, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, 5 பேரையும் கைது செய்தனர்.
பின்னர், 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT