

திருப்பூர்: ஊத்துக்குளி பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த பலர் பின்னலாடை, விசைத்தறி உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், வடமாநிலங்களில் இருந்துரயில் மூலமாக கடத்தி வந்து இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கஞ்சா சாக்லெட், சட்டவிரோத போதைப்பொருட்கள் விற்பனை நடந்து வருவதை, அவ்வப்போது போலீஸார் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கஞ்சாசாக்லெட்டை ரயில் மூலமாக சிலர் கடத்தி வந்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், ஊத்துக்குளி போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பூசாரிபாளையத்தில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தவர்களை விசாரித்தனர். அதில், அதே பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சாகதிப் மாலிக் (35) என்பதும், ஒடிசாவிலிந்து ரயில் மூலமாக கடத்தி வந்து கஞ்சா சாக்லெட்டை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா சாக்லெட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதேபோல், குண்டடம்தொட்டியந்துறை பகுதியிலுள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்ந்துள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், மதுவிலக்கு போலீஸார் அங்கு சோதனையிட்டனர்.
அப்போது, வீட்டின் அருகே சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தரக் முண்டல் (33), அனுப் சர்தார் (22) ஆகியோரை கைது செய்து, அவர்கள் வளர்த்த ஒரு கிலோ 800 கிராம் எடையுள்ள 2 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
குன்னத்தூர் ஒடத்தலாம்பதி ரங்கா நகரில் ரமேஷ்பாண்டியன் (38) என்பவர் புகையிலை பொருட்கள் வைத்திருப்பதாக, தனிப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரங்கநாதனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, குன்னத்தூர் போலீஸார் அங்கு சென்று சோதனை செய்ததில், விற்பனைக்காக வைத்திருந்த 140 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். ரமேஷ் பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.