Published : 13 Feb 2024 06:35 AM
Last Updated : 13 Feb 2024 06:35 AM

எத்தனை பேரிடம் பணம் பறித்துள்ளனர் என கண்டறிய நைஜீரிய இளைஞர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு

அகஸ்டின் மதுபுச்சி, சினேடு

சென்னை: திருமண பரிசு என்ற பெயரில், நூதன முறையில் பெண் டாக்டரிடம் பண பறித்த விவகாரத்தில் கைதான நைஜீரிய இளைஞர்கள், இதுபோல் எத்தனை பேரிடம் பணம் பறித்துள்ளனர் எனக் கண்டறிய அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் க்ரைம் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

கே.கே.நகரைச் சேர்ந்த பெண் மருத்துவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்று அளித்தார். அதில், ‘மாப்பிள்ளை வேண்டி திருமண தகவல் மைய (மேட்ரிமோனியல்) இணையதளம் ஒன்றில் பதிவு செய்திருந்தேன். அப்போது, ஹாங்காங்கில் டாக்டராக இருப்பதாகக் கூறி வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு, குறுஞ்செய்தி அனுப்பி இளைஞர் ஒருவர் பேசத் தொடங்கினார். அவரது பெயரை அலெக்ஸாண்டர் சான்சீவ் எனத் தெரிவித்தார்.

பின்னர், அவர் என்னை பிடித்திருப்பதாகக் கூறி திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவரது பேச்சு நம்பும் வகையில் இருந்ததால் எனக்கும் அவரைப் பிடித்திருந்தது. இந்நிலையில், அவர் திருமணத்துக்கு முன் மதிப்பு மிக்க பரிசுப் பொருட்களை உனக்கு அனுப்பி வைத்ததாகத் தெரிவித்தார்.

அதன் பிறகு டெல்லி விமான நிலையத்திலிருந்து சுங்கத் துறை அதிகாரி பேசுவதாகக் கூறி சுங்கவரி கட்டினால் மட்டுமே உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பரிசுப் பொருள் பார்சல் கைக்கு வந்து சேரும் எனத் தெரிவித்தார். இதை உண்மை என நம்பி அவர்கள் கூறிய பல்வேறு வங்கிக் கணக்குக்கு ரூ.2 கோடியே 87 லட்சம் அனுப்பி வைத்தேன்.

அதன் பிறகு எனக்கு பரிசுப் பொருள் அனுப்பி வைத்ததாகக் கூறிய டாக்டர் மற்றும் சுங்கத் துறை அதிகாரி போல் பேசியவர் ஆகியோரின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டன. அதன் பிறகே நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து, திருமண பரிசு மோசடியில் ஈடுபட்டதாக நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அகஸ்டின் மதுபுச்சி (29), சினேடு (36) ஆகிய இருவரை டெல்லியில் கைது செய்தனர். பின்னர், அவர்களை சென்னை அழைத்து வந்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இவர்கள் எத்தனை பேரிடம் இதுபோல் பணம்பறித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது பின்னணியில் வேறுயாரேனும் உள்ளனரா? தமிழகம் மட்டும் அல்லாமல் வேறு மாநிலங்களிலும் கைவரிசை காட்டி உள்ளார்களா? என்பன உட்பட பல்வேறு தகவல்களைச் சேகரிக்க கைதுசெய்யப்பட்ட நைஜீரிய இளைஞர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் க்ரைம் போலீஸார் முடிவு செய்துள்ளனர். அதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x