

சென்னை: பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மாசூம் (27). இவர், சென்னைபெரியமேடு, ஈ.கே.குரு தெருவில் தங்கி, எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் உள்ள டீக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 9-ம் தேதி அதிகாலை ஒரு மணியளவில் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக, எழும்பூர் ரயில் நிலையம், வடக்கு நுழைவு வாயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு ஒரு பெண்உட்பட 3 பேர் மாசூமை வழிமறித்து பணம் கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுக்கவே 3 பேரும் சேர்ந்து கண்ணாடி பாட்டிலை உடைத்து சரமாரியாகத் தாக்கி, அவரிடமிருந்த பணத்தை வழிப்பறி செய்து தப்பினர். இதுகுறித்து எழும்பூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்தினருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக பல்லாவரத்தைச் சேர்ந்த சங்கீதா என்ற ஒத்தை ரூபா சங்கீதா (23), பெரியமேடு சூர்யா (23), எழும்பூர் விஜய் (20) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் சூர்யா எழும்பூர் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி எனத் தெரியவந்தது. 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.