

சென்னை: வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தில் பெண் மருத்துவர் ஒருவர் ரூ.2.87 கோடி ஏமாந்துள்ளார். இது தொடர்பாக நைஜீரியாவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கே.கே.நகரை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்று அளித்தார். அதில், அவர் கூறியிருந்ததாவது:
மாப்பிள்ளை வேண்டி திருமண தகவல் மைய (மேட்ரிமோனியல்) இணையதளம் ஒன்றில் பதிவு செய்திருந்தேன். அப்போது, ஹாங்காங்கில் டாக்டராக இருப்பதாக கூறி ஒருவர் வாட்ஸ்அப்பில் தொடர்புகொண்டு பேசத் தொடங்கினார்.
அவரது பெயரை அலெக்ஸாண்டர் சான்சீவ் என தெரிவித்தார். என்னை பிடித்திருப்பதாக கூறி, திருமணம் செய்து கொள்ளவிருப்பம் தெரிவித்தார். அவரது பேச்சு நம்பும் வகையில் இருந்ததால் எனக்கும் அவரை பிடித்திருந்தது.
இந்நிலையில், அவர் எனக்கு மதிப்பு மிக்க பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார். அதன்பிறகு டெல்லி விமான நிலையத்தில் இருந்து சுங்கத்துறை அதிகாரி பேசுவதாக கூறி என்னை தொடர்பு கொண்ட ஒருவர், சுங்க வரி கட்டினால் மட்டுமே உங்களுக்கு கிடைக்க வேண்டிய பரிசுப் பொருள் பார்சல் கைக்கு வந்து சேரும் என தெரிவித்தார். இதை உண்மை என நம்பி அவர்கள் கூறிய பல்வேறு வங்கிக் கணக்குக்கு ரூ.2 கோடியே 87 லட்சம் அனுப்பி வைத்தேன்.
அதன்பிறகு டாக்டர் மற்றும் சுங்கத்துறை அதிகாரி என பேசியவர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டன. அப்போதுதான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். மோசடி கும்பல் டெல்லியில் பதுங்கி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டெல்லி விரைந்த போலீஸார், அங்கு பதுங்கி இருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அகஸ்டின் மதுபுச்சி (29), சினேடு (36) ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 7 செல்போன்கள், 3 லேப்டாப்கள் மற்றும் 40 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரும் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.