

சென்னை: கேரள போலீஸாரால் தேடப்படும் குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த பஷீர் அகமது (51) என்பவர் சுற்றுலா பயணியாக துபாய் செல்ல வந்திருந்தார். அவருடைய பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் கம்யூட்டரில் சோதனை செய்தபோது, அவர் கேரள மாநிலம் மலப்புரம் போலீஸாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பதும், நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்ததால், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, பயணி பஷீர் அகமதுவை பிடித்து தனி அறையில் அடைத்து வைத்த அதிகாரிகள், கேரள போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சென்னை விமான நிலையம் வந்து அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.