சிவசேனா - உத்தவ் தாக்கரே அணியின் பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை @ மும்பை

சிவசேனா - உத்தவ் தாக்கரே அணியின் பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை @ மும்பை
Updated on
1 min read

மும்பை: சிவசேனா - உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த கட்சி பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரை சுட்டுக் கொன்ற நபரும் தற்கொலை செய்து கொண்டார். வியாழக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து மும்பை, தஹிசார் பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த 41 வயதான அபிஷேக் கோசல்கர் தான் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கோசல்கரின் மகன் ஆவார். அவரை மொரிஸ் நோரோன்ஹா எனும் நபர் கொலை செய்துள்ளார். துப்பாக்கி சூடு நடத்திய மொரிஸ் நோரோன்ஹாவும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தஹிசார் பகுதியில் உள்ள போரிவாலியில் நடைபெற்றுள்ளது.

அபிஷேக் மற்றும் மொரிஸுக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இத்தகைய சூழலில் இருவரும் பகையை முறித்துக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக ஃபேஸ்புக் நேரலையில் பகிர்ந்தனர். அப்போது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அபிஷேக்கை நோக்கி மொரிஸ் துப்பாக்கியால் சுட்டார். ஐந்து குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் சரிந்து விழுந்தார். இது அனைத்தும் ஃபேஸ்புக் நேரலையில் பதிவானது. தொடர்ந்து அந்த வீடியோ பரவலாக கவனம் பெற்றது. இதையடுத்து மொரிஸ், தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இருவரது உடலும் உடற்கூறு ஆய்வுக்காக இருவேறு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தவ் அணியினர் வலியுறுத்தி உள்ளனர்.

அண்மையில் பாஜக எம்எல்ஏ கணபதி கெய்க்வாட், சிவ சேனா - ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த மகேஷ் கெய்க்வாட் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த விவகாரத்தில் கணபதி கெய்க்வாட் கைது செய்யப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in