

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே காவலாளியை கொலை செய்தது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குன்றத்தூரை அடுத்த சிறுகளத்தூர், சரஸ்வதி நகர் பகுதியில் கடந்த டிச. 30-ம் தேதி தலை, கை, கால்கள் இல்லாமல் உடலில் கல்லை கட்டி செம்பரம்பாக்கம் ஏரியில் வீசியிருந்ததாக குன்றத்தூர் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கொலை செய்யப்பட்டு கிடந்தவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பூமிநாதன் (33) என்பதும் ராமாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
இவருடன் பணிபுரிந்து வந்த காவலாளி குன்றத்தூரை அடுத்த சிறு களத்தூர், சரஸ்வதி நகர் பகுதியை சேர்ந்த திலீப்குமார்(34), என்பவர் தனது நண்பரான ராமாபுரத்தை சேர்ந்த விக்கி(எ)விக்னேஷ்(22), என்பவருடன் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது: பூமிநாதன் காவலாளியாக வேலை செய்த இடத்தில் அவருடன் வேலை செய்த பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. மேலும் திலீப்குமாருக்கும் அதே பெண்ணிடம் ஈர்ப்பு ஏற்பட்டு அவருக்கு அதிக அளவில் பணம் செலவு செய்து வந்துள்ளார்.
அந்த பெண்ணுக்கு பூமிநாதனுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தவுடன் திலீப் குமாருக்கும், பூமிநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் திலீப் குமாரிடம் இருந்து பூமிநாதன் அதிக அளவில் பணத்தை வாங்கி விட்டு அதனை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார்.
இதனால் பூமி நாதனை கொலை செய்ய திட்டமிட்ட திலீப் குமார் அவரை மிரட்டி டிச. 27-ம் தேதி தனது பைக்கின் நடுவே அமர வைத்து கொண்டு செல்ல முயன்றார். அப்போது பைக்கில் இருந்து இறங்க முயற்சித்த போது தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பூமிநாதன் தலையில் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், அவரது உடலை போலீஸாருக்கு தெரியாமல் அகற்றுவதற்காக 12 கிமீ தூரத்துக்கு பைக்கில் அமர வைத்து சிறுகளத்தூரில் உள்ள அவரது வீட்டுக்கு உடலை எடுத்து வந்து கை, கால், தலை ஆகியவற்றை துண்டு, துண்டாக வெட்டி வீட்டின் பின்புறத்தில் இருந்த கல்லை எடுத்து உடலில் கட்டி செம்பரம்பாக்கம் ஏரியில் வீசிவிட்டு, தலை மற்றும் கைகளை வண்டலூர் ஏரியில் வீசியது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் திலீப் குமாரிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 17 தோட்டாக்கள், 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர். போலீஸார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.