

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட தலைமை காவலரை பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரி ( 58 ). இவர் கடந்த 27-ம் தேதி இருசக்கர வாகனத்தில் ஜோதி நகர் அருகே சென்றபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் மகேஸ்வரி அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்து தப்பி சென்றார். அதே நாளில் கோலார்பட்டி சுங்கத்தை சேர்ந்த முருகன் மனைவி அம்சவேணி ( 32 ) இருசக்கர வாகனத்தில் உடுமலை சாலை பி.ஏ.பி. அலுவலகம் அருகே சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் 2 பவுன் நகையை பறித்துச் சென்றார்.
ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இரண்டு சம்பவங்கள் குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்தனர். சம்பவம் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்ததில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது செட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த சபரி கிரி ( 41 ) என்பது தெரியவந்தது.
இதையடுத்து மாக்கினாம்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று நகை பறிப்பின் போது அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனம், தலைக்கவசம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சபரி கிரியை கடந்த 2-ம் தேதி போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நகை பறிப்பில் ஈடுபட்ட சபரி கிரி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அவரை பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.