Published : 05 Feb 2024 06:30 AM
Last Updated : 05 Feb 2024 06:30 AM
சென்னை: மாணவியை பாலியல் தொழிலில் தள்ளிய உறவுக்கார பெண் (அத்தை) உட்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவி தற்போது கர்ப்பமான நிலையில் இந்த அதிர்ச்சி சம்பவம் வெளியானது.
இந்த அதிர்ச்சிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை ஓஎம்ஆர் சாலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் மகள் அரசு பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மே மாதம் பள்ளி விடுமுறையில், மாணவியை அவரது தந்தை தனது தங்கை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அங்கு சென்ற மாணவியை அவரது அத்தை மிரட்டி நிர்பந்தப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். முதல்கட்ட மாக ரூ.10 ஆயிரம் பெற்றுக் கொண்டு கோயம்பேடு அழைத்துச் சென்று அங்கிருந்து வேளச்சேரிக்கு இளைஞர் ஒருவருடன் ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளார். அவர் மாணவியை 5 நாட்கள் அவரது வீட்டில் தங்க வைத்து அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, வாரம் ஒருமுறை வெவ்வேறு நபர்களிடம் மாணவியை அனுப்பி பணம் வாங்கியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி பெற்றோரிடம் செல்ல வேண்டும் என அடம் பிடித்துள்ளார். இதையடுத்து, வேறு வழியின்றி மாணவியை அவரது வீட்டுக்கு அத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், மாணவிக்கு தொடர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த தந்தை மருத்துவமனை சென்று சிகிச்சை அளித்தார். பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ந்துபோன தந்தை மகளிடம் நடந்த விவரம் குறித்து கேட்டுள்ளார். அத்தையின் செயல்பாடுகளை கூறி கண்ணீர் வடித்துள்ளார் மாணவி.
இதையடுத்து, கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து அத்தையான அந்தப் பெண்ணை கைது செய்தனர். மேலும், இதற்கு துணையாக இருந்த மேலும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மாணவி குழந்தைகள் நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
தந்தையை கைது செய்த போலீஸ்: மகளை தனது தங்கையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதை அறிந்த உடன் அவரது வீட்டுக்கு சென்று சரமாரியாக தாக்கி கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த மாணவியின் அத்தை அப்பகுதி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
மாணவியை அவரது அத்தையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் எதிர் புகார் கூறிய நிலையில் போலீஸார் அது குறித்து அப்போது முறையாக விசாரிக்காமல் மாணவியின் தந்தையையே கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர் சிறையில் இருந்து வெளியே வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அன்றைய தினமே போலீஸார் விசாரித்து இருந்தால் சிறுமியின் அத்தை அப்போதே கைது செய்யப்பட்டிருப்பார் என மாணவி தரப்பினர் விரக்தியுடன் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT