

சென்னை: சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த சுபாஷ் சந்திர கபூரின் கூட்டாளியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து, 8 உலோக சிலைகளை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்திலிருந்து ஏராளமான பழமைவாய்ந்த சிலைகள், கலை பொக்கிஷங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு வெளி நாடுகளுக்கு கடத்தப் பட்டது தொடர்பாக, தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில்,பெரும்பாலான சிலைகள் கடத்தப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டது அமெரிக்க குடியுரிமை பெற்ற சுபாஷ் சந்திர கபூர் ( 73 ) என்பது தெரிய வந்தது. வெளி நாடுகள் மட்டுமின்றி, தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு சிலை கடத்தல் வழக்கிலும் இவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் 2011-ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச இன்டர் போல் போலீஸார் உதவியுடன் ஜெர்மனியில், அந்நாட்டு போலீஸார் சுபாஷ் சந்திர கபூரைக் கைது செய்தனர். பின்னர், 2012-ம் ஆண்டு அவர் நாடு கடத்தப்பட்டார். விசாரணைக்கு பிறகு, அவருக்கு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனையை விதித்தது. சுபாஷ் சந்திர கபூர் 10 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து விட்டார். இருப்பினும் அவர் மீது மேலும் சில வழக்குகள் உள்ளதாலும், நீதிமன்றம் விதித்த அபராதத்தை செலுத்தாததாலும் அவர் சிறையிலேயே உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் சுபாஷ் கபூரின் கூட்டாளியான லட்சுமி நரசிம்மனையும் ( 59 ) திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் இந்திரா தலைமையிலான தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், லட்சுமி நரசிம்மன் மாமல்லபுரத்தில் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, தகவலின் பேரில், போலீஸார் மாமல்லபுரம் குச்சிக்காடு பகுதிக்கு சென்று அவரை கைது செய்தனர். மேலும், அங்கு, அவருக்கு சொந்தமான சதர்ன் ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் குடோனிலும் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு, எந்த வித ஆவணங்களும் இல்லாமல் வைத்திருந்த, கேரள விஷ்ணு, அய்யனார், அருணாசலேஸ்வரர், தவழும் கிருஷ்ணர் ( 2 சிலைகள் ), நடனமாடும் கிருஷ்ணர், புத்தர், நந்தி உள்ளிட்ட 8 உலோக சிலைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த சிலைகள், கேரளா, தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டிருக்காலம் என போலீஸார் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த பிறகு தான், இந்த சிலைகள் எந்த காலகட்டத்தை சேர்ந்தது, மதிப்பு, எந்த கோயில்களில் இருந்து திருடப்பட்டது என்பது குறித்து தெரிய வரும் என போலீஸார் தெரிவித்தனர்.
ஏற்கெனவே, சுபாஷ் கபூருடன், லட்சுமி நரசிம்மனையும் கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்திருந்த நிலையில், ஜாமீனில் வெளியே இருக்கும் லட்சுமி நரசிம்மனை போலீஸார் 2-வது முறையாக கைது செய்துள்ளனர். லட்சுமி நரசிம்மனை கைது செய்து உலோக சிலைகளை பறிமுதல் செய்தகாவல் ஆய்வாளர் இந்திரா உள்ளிட்ட தனிப்படை போலீஸாரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் வெகுவாக பாராட்டினார்.