

திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே தாறுமாறாக ஓடிய போலீஸ்வேன் மோதி பெண் உயிரிழந்த விவகாரத்தில், வேனை ஓட்டிய காவலர் கைது செய்யப்பட்டார். தொட்டியம் அருகேயுள்ள சீலைப்பிள்ளையார் புத்தூர்கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து, அங்கு நேற்று முன்தினம் இரவு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, போலீஸ் வேன் ஒன்று தாறுமாறாக ஓடியதில், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதுடன், அவ்வழியாக ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மீதும் மோதி நின்றது.
இதில், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த, கரூர் மாவட்டம் மாயனூர் அருகேயுள்ள முனையனூர் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி தங்கராஜ் மனைவி மருதாயி(38) அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த, அதே பகுதியைச் சேர்ந்ததீனதயாளன்(48), சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த தீபன் ஆகியோர் காயங்களுடன் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
தகவலறிந்த மத்திய மண்டல ஐ.ஜி. ஜி.கார்த்திகேயன், திருச்சி சரக டிஐஜி மனோகர், எஸ்.பி. வருண்குமார், முசிறி டிஎஸ்பி யாஸ்மின் உள்ளிட்டோர் விபத்து நேரிட்ட இடத்தைப் பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். இதில், காவல் துறை வாகனத்தை ஓட்டிய காவலர் மதுபோதையில் இருந்ததால், விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
தொடர் விசாரணையில், காவல் துறை வாகனத்தை ஓட்டுநர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட காவலர் சதீஷுக்குப் பதிலாக, மற்றொரு காவலர் லோகநாதன்(36) ஓட்டியது தெரியவந்தது.
இது தொடர்பாக காட்டுப்புத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய காவலர் லோகநாதனை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.