Published : 03 Feb 2024 07:03 AM
Last Updated : 03 Feb 2024 07:03 AM
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மாநகராட்சி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் 8 வயதுடைய 4-ம் வகுப்பு மாணவர் ஒருவர் அதே பள்ளியில் 7 முதல் 10 வயதுக்கு உட்பட்ட பள்ளி சிறுமிகள் சிலரை சாக்லேட், சில பொருட்களை கொடுத்து ஆசை வார்த்தை கூறிபள்ளி நேரத்தில் அடிக்கடி வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
அச்சிறுமிகள் அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் காலியாக இருந்த அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு தயாராக இருந்த இளைஞர் ஒருவர் சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிகள் வெளியே சொல்ல பயந்தும், தனக்கு என்ன நடந்தது என்ற புரிதல் இல்லாமலும் நடந்த நிகழ்வுகளை ஆசிரியரிடமும், பெற்றோரிடமும் சொல்லாமலும் இருந்துள்ளனர். இந்த விவகாரம் அண்மையில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ மற்றும் மேலும் சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனர். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரைப் பிடிக்க அடையாறு காவல் துணை ஆணையர் பொன் கார்த்திக் குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் 3 சிறுமிகள் ஒரேஇளைஞரால் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான அந்த இளைஞரை, பாதிக்கப்பட்ட சிறுமிகள், அவர்களை அழைத்துச் சென்றமாணவர் மூலம் அடையாளம் கண்டு நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்டவர் பெயின்டர் வேலை செய்துவந்த அடையாறு அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த யோவான் என்ற ஜான்(29) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கைதான யோவான் கொட்டிவாக்கத்தில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்கு அடிக்கடி வந்துசென்றுள்ளார். அப்போது, சிறுமிகளை அழைத்துச் சென்ற சிறுவனுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
அந்தசிறுவனுக்கு சாக்லேட் கொடுத்து சிறுமிகளை அழைத்து வர கூறியுள்ளார். இதேபோல் அவர்களுக்கும் கொடுக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இதை நம்பி அச்சிறுவன் சிறுமிகளை யோவான் சொன்னஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமிகளை மிரட்டி, யோவான் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது'' என்றனர்.
வாழ்நாள் சிறை? - இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவருமான கே.சாந்தகுமாரி கூறும்போது, ‘‘போக்சோ சட்டத்தின்கீழ் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 10 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறை தண்டனை விதிக்கப்படும்.
அதுவே, 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்ச்சி செய்தாலோ அல்லது பாலியல் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டாலோ சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும்.
இதிலும், மோசமான பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபட்டிருந்தால் அந்த குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கவும் போக்சோ சட்டத்தில் இடம்உள்ளது. இதுபோன்ற கொடுமையான செயல்களில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்திதண்டனை பெற்று தருவது போலீஸார் மட்டுமின்றி அனைவரது கடமை’’என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT