Published : 03 Feb 2024 06:25 AM
Last Updated : 03 Feb 2024 06:25 AM

தொப்பூர் அருகே தற்காலிக முகாம் அமைத்து கருவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்த கும்பலைச் சேர்ந்த இருவர் கைது

தொப்பூரை அடுத்த பரிகம் கிராமத்தில் தற்காலிக முகாம் அமைத்து, சட்ட விரோதமாக கருவின் பாலினம் தெரிவித்த கும்பல் குறித்து சுகாதாரம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை மேற் கொண்டனர்.

தருமபுரி: தொப்பூர் அருகே சட்ட விரோதமாக கருவின் பாலினம் தெரிவித்த கும்பலைச் சேர்ந்த இருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். தருமபுரி மாவட்டத்தில் பரவலாக தற்காலிக முகாம்கள் அமைத்து சட்ட விரோதமாக கருவின் பாலினம் தெரிவித்தல் மற்றும் கருக்கலைப்பு ஆகிய நடவடிக்கைகளில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக தருமபுரி மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்படி, அந்தக் கும்பல் தொப்பூர் அடுத்த பரிகம் கிராமத்தில் ஒரு வீட்டில் தற்காலிக முகாம் அமைத்து சில பெண்களுக்கு கருவின் பாலினம் கண்டறிந்து தெரிவிக்க உள்ளதாக தெரிய வந்தது. எனவே, தருமபுரி மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி தலைமையில் தொப்பூர் போலீஸார் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த வனிதா (35) மற்றும் அவரது சசோதரர் முருகன் (30) ஆகியோர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த வடிவேல் என்பவருடன் இணைந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 13 கர்ப்பிணி பெண்களை நேற்று சோதனைக்காக அழைத்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் ஓரிடத்துக்கு வரவழைத்து அங்கிருந்து காரில் பரிகம் கிராமத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு, பாலினம் கண்டறிந்து தெரிவிக்கும் உபகரணங்களுடன் தயாராக இருந்த வடிவேல் 13 பெண்களையும் பரிசோதனை செய்து பாலினம் கண்டறிந்து தெரிவித்துள்ளார். இதற்கு ரூ.13 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கர்ப்பிணிகளை அழைத்து வருவதற்காக ஒரு நபருக்கு ரூ.5,000 வீதம் வனிதாவுக்கு கமிஷன் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று பாலினம் அறிந்து கொண்டவர்களில், கருக்கலைப்பை தேர்வு செய்யும் பெண்களுக்கு மற்றொரு நாளில் வேறொரு இடத்தில் கருக்கலைப்பு மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து வனிதா, ஓட்டுநரான முருகன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். போலீஸாரைக் கண்டதும் தலைமறைவான வடிவேலை போலீஸார் தேடி வருகின்றனர்.

மேலும், இந்த பணிக்காக வீட்டை வழங்கிய, பரிகம் கிராமத்தைச் சேர்ந்த நபர் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. இதுதவிர, கருவின் பாலினம் அறிந்து கொள்ள வந்திருந்த கர்ப்பிணி பெண்களுக்கு போதிய அறிவுரை மற்றும் எச்சரிக்கை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x