

சென்னை: ராயபுரத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவர் கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் படுக்கை அறையின் மறைவான இடத்தில் பேனா ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதை எடுத்து பார்த்தபோது அதில் சிறிய அளவில் கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அப்பெண், தனது கணவருக்கு தெரிவித்தார். அவர் அந்த பேனாவை ராயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, அதுகுறித்து புகார் அளித்தார். சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
பேனாவிலிருந்த கேமராவை ஆய்வு செய்தபோது, அதில், அந்தப் பெண் உடை மாற்றுவது உள்ளிட்ட வீடியோக்கள் இருந்தன. இதையடுத்து, கேமராவை படுக்கை அறையில் வைத்தது யார் என போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், அப்பெண் வசித்து வரும் வீட்டின் உரிமையாளரின் மகனும், முதுநிலை பல் மருத்துவ மாணவருமான இப்ராஹிம் (36) என்பவர் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
வாடகை வீடு என்பதால் அந்த வீட்டின் மற்றொரு சாவி, வீட்டு உரிமையாளரிடம் இருந்துள்ளது. அதன்மூலம் யாரும் இல்லாத நேரத்தில் கதவைத் திறந்து, படுக்கை அறையில் பேனா கேமராவை இப்ராஹிம் வைத்துள்ளார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.