

நாமக்கல்: வயதான தம்பதியினரை அடித்துக் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதான நாமக்கல் தீயணைப்பு படை வீரர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் அருகே குப்புச்சிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (70). இவரது மனைவி நல்லம்மாள் (65). இருவரும் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது படுகொலை செய்யப்பட்டனர். மேலும், நல்லம்மாள் அணிந்திருந்த நகைகளும் திருடப்பட்டன. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்த பரமத்தி வேலூர் அடுத்த குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த டி.ஜனார்த்தனன் (33) என்ற தீயணைப்பு வீரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த நவ.,24-ம் தேதி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இச்சூழலில் ஜனார்த்தனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட போலீஸ் எஸ்பி எஸ்.ராஜேஸ்கண்ணன் பரிந்துரை செய்தார். ஆட்சியர் அனுமதியை அடுத்து ஜனார்த்தனன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கான நகல் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஜனார்த்தனனிடம் வழங்கப்பட்டது.