Published : 28 Jan 2024 03:02 PM
Last Updated : 28 Jan 2024 03:02 PM

தென் மாவட்டங்களில் வீடுகளில் தூங்குவோரை கொடூரமாக தாக்கி கொள்ளை அடிக்கும் முகமூடி கும்பல்

சிவகங்கை: சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இரவில் வீடுகளில் தூங்குவோரை கொடூரமாகத் தாக்கி முகமூடி கும்பல் கொள்ளை அடித்து வருகிறது. இதற்கு காவல் துறையினர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கல்லு வழியில் ஜன. 26-ம் தேதி அதி காலை வீட்டில் தூங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கிவிட்டு முகமூடி கும்பல் நகைகளை கொள்ளை அடித்து தப்பியது. எஸ்பி அரவிந்த் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன. இச்சம்பவத்தில் 2 முதல் 5 பேர் வரையிலான முகமூடி அணிந்த கும்பல் ஈடுபட்டிருக்கலாம் எனவும், மயக்க ஸ்பிரே அடித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

கொள்ளை நடந்த வீட்டில் கடை நடத்தி வந்துள்ளனர். இதனால் அங்கு வந்து சென்ற நபர்கள் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு, வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் அப்பகுதியில் தங்கி மரக் கன்றுகளை நடவு செய்ததாகவும், சிலர் கட்டிடத் தொழில் செய்த தாகவும், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டதாகவும் கூறுகின்றனர். அவர்கள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

கடந்த 2020 ஜூலை மாதம் கல்லுவழி அருகேயுள்ள முடுக்கூரணியில் வீட்டில் தூங்கிய மாமியார், மருமகளை இரும்புக் கம்பியால் தாக்கி கொன்று 58 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. அதே பகுதியில் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டையில் கடந்த ஆண்டு ஜனவரியில் வீட்டில் தூங்கிய தாய், மகளை இரும்புக் கம்பியால் தாக்கி கொன்று 50 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. ஏற்கெனவே நடந்த 2 சம்பவங்களிலும் குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தாலும், அவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என அப் போதே புகார் எழுந்தது.

மேலும் கொள்ளை நடந்த 3 கிராமங் களுமே ஒரே பகுதியில் உள்ளன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி நடமாடியவர்களே, இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதேபோன்று வீட்டில் தூங்கிய வர்களை தாக்கி கொள்ளை அடித்த சம்பவம் பெரம்பலூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடந்துள்ளன. அதிலும் குற்றவாளிகள் சிலரை போலீஸார் கைது செய்தனர். எனினும், அதே பாணியில் கொடூரமாகத் தாக்கி கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்கிறது.

பவாரியா கும்பல்: 2005-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கொடூரமான பவாரியா கொள்ளை யர்கள் வீடு புகுந்து தாக்கி கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்தனர். அதே காலகட்டத்தில் அதே கும்பல் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த வீடுகளில் நள்ளிரவில் அதிரடியாக கதவை உடைத்து புகுந்து வீட்டில் உள்ளவர்களை இரும்பு ராடால் கொடூரமாக தாக்கி கொள்ளை அடித்தது.

அக்கும்பலை அப்போதைய ஐபிஎஸ் அதிகாரி ஜாங்கிட் தலை மையிலான தனிப்படையினர் தீவிர புலனாய்வு செய்து பிடித்து தண் டனையும் பெற்றுக் கொடுத்தனர். தற்போது தென் மாவட்டங்களில் ஒரே பாணியில் கொள்ளைகள் நடந்து வருகின்றன. மேலும் இது போன்ற கொடூரத் தாக்குதலில் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட கொள்ளையர்கள், வட மாநில கொள்ளையர்கள் மட்டுமே ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஜபிஎஸ் அதிகாரி தலைமையில் பெரிய அளவில் தனிப் படைகளை அமைத்து கொள்ளைக் கும்பலைப் பிடித்து இச்சம்பவங்கள் தொடராமல் இருக்க முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமன கோரிக்கை எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x