Published : 21 Jan 2024 04:08 AM
Last Updated : 21 Jan 2024 04:08 AM
திருவாரூர்: முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டவரை போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
கவிஞர் வைரமுத்து குரலில், முன்னாள் முதல்வர் கருணாநிதியை தவறாக சித்தரித்து, சமூக வலை தளத்தில் வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. இது குறித்து திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் இளைய ராஜா, திருத்துறைப் பூண்டி போலீஸில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக காவல் ஆய்வாளர் கழனியப்பன் தலைமையில் உதவி ஆய்வாளர் சரவணன், சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் கணபதி ஆகியோர் அடங்கிய தனிப் படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், அவதூறு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றியது தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளி தெற்கு வாடியகாடை பகுதியைச் சேர்ந்த செந்தில் நாதன் ( 34 ) என்பதும், அவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இந்நிலையில், அவர் திருக்காட்டுப் பள்ளியில் இருப்பதை அறிந்த போலீஸார், நேற்று முன்தினம் இரவு செந்தில் நாதனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
‘‘இது போன்ற சர்ச்சைக்குரிய பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என திருவாரூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT