

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் நடந்த பெண் கொலை தொடர்பாக ஹோமியோபதி மருத்துவர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பென்னாகரம் இந்திரா நகரைச் சேர்ந்த குணசேகரன் மனைவி சுமதி ( 45 ). இந்த தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக குணசேகரனும், சுமதியும் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். சுமதி, சுகாதாரத் துறையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். சுமதியின் 2 மகன்களும் படிப்பை முடித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். எனவே, பென்னாகரத்தில் உள்ள வீட்டில் சுமதி மட்டும் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 13-ம் தேதி சுமதி வீட்டிலேயே வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக பென்னாகரம் டிஎஸ்பி மகா லட்சுமி மேற்பார்வையில் தனிப்படை போலீஸார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், சுமதியின் சகோதரரின் மனைவியான ஹோமியோபதி மருத்துவர் இந்திரா குமாரி உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, ‘சுமதியின் சகோதரர் சீனிவாசன். அவரது மனைவி இந்திரா குமாரி, ஹோமியோபதி மருத்துவர். பென்னாகரம் அடுத்த இந்திரா நகர் பகுதியில் தன் தாய் வீட்டில் இந்திரா குமாரி தங்கியிருந்தபோது, அவருக்கும் சுமதிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இந்திரா குமாரி தன் சகோதரர் அரவிந்த் ( 18 ) என்பவரிடம் இது குறித்து தெரிவித்து சுமதியை கண்டிக்குமாறு கூறியுள்ளார்.
இந்நிலையில், அரவிந்த், தன் நண்பரான 17 வயது சிறுவன் ஒருவருடன் இணைந்து சம்பவத்தன்று கத்தியுடன் சுமதி வீட்டுக்கு சென்று மிரட்டியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அரவிந்த் தன் நண்பருடன் இணைந்து சுமதியை கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். விசாரணையில் இந்த தகவல்களை கண்டறிந்த நிலையில் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 17 வயது சிறுவர் கூர் நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டார். மற்ற இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்’ என்றனர்.