Published : 17 Jan 2024 04:08 AM
Last Updated : 17 Jan 2024 04:08 AM
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலைகள் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்தப் படுவதாக கியூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆய்வாளர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி, ராமச்சந்திரன் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
76 மூட்டை பீடி இலை: அப்போது தூத்துக்குடி அருகே உள்ள சிலுவைபட்டியில் இருந்து கடற்கரை செல்லும் சாலையில் சந்தேகப்படும் படியாக வந்த ஒரு மினி லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் தலா 35 கிலோ எடை கொண்ட 76 மூட்டைகளில் மொத்தம் 2,660 கிலோ பீடி இலை இருந்தது தெரியவந்தது. மினி லாரி மற்றும் பீடி இலை மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இலங்கையில் இந்த பீடி இலையின் மதிப்பு ரூ.50 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதேபோல் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் பண்டல்களுடன் வந்த நபரை போலீஸார் மடக்கினர். மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அவர் தப்பிச் சென்று விட்டார். மோட்டார் சைக்கிளை போலீஸார் சோதனை செய்த போது, சுமார் 57 ஆயிரம் ப்ரீகேப் 150 மி.கி. ( Pregab 150 Mg ) என்ற வலி நிவாரணி மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. போலீஸார் அந்த மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் என்று கூறப்படுகிறது.
ரூ.1 கோடி: தொடர்ந்து நேற்று அதிகாலையிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தருவைகுளத்தில் இருந்து வெள்ளப்பட்டிக்கு செல்லும் சாலையில் கடற்கரை பகுதியில் ஒரு டாரஸ் லாரி மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் நின்று கொண்டிருந்தன. அந்த லாரியில் இருந்து படகில் சிலர் கறுப்பு நிற பண்டல்களை இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.
உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றதையடுத்து படகில் இருந்தவர்கள் தப்பிச் சென்று விட்டனர். போலீஸார் அந்த பண்டல்களை சோதனை செய்த போது தலா 35 கிலோ எடை கொண்ட 76 மூட்டைகளில் பீடி இலைகள் இருந்தன. இலங்கையில் இதன் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் என்று கூறப்படுகிறது. பீடி இலை பண்டல்கள், லாரி மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். அங்கிருந்த தூத்துக்குடி பகுதியை சேர்ந்த பாலகோகுல் ( 21 ), ஸ்டீபன் என்ற அன்பு ( 42 ) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT