

சென்னை: மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தனது தந்தையால் 8 ஆண்டுகளாக பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளதாக சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுமி, தனது தாயிடம் கூறியுள்ளார். கணவரை கண்டித்த மனைவி, காவல் துறையில் புகார் அளிக்காத நிலையில், அந்த சிறுமியே கடிதம் மூலம் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கை சென்னை மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி எம்.ராஜ லட்சுமி விசாரித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறுமியின் தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். குற்றத்தை மறைத்ததற்காக சிறுமியின் தாய்க்கு 6 மாத சிறை தண்டனை விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவரது சகோதரிக்கும், தலா ரூ.10 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.