

சென்னை: சீனாவிலிருந்து ரூ.100 கோடிக்கு நிலக்கரி ஆர்டர் கிடைத்துள்ளதாக கூறி ரூ.3 கோடி பெற்று மோசடி செய்ததாக ஒருவரை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கோயம்பேட்டை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ‘எனக்கு தெரிந்த நண்பர்களான சுரேஷ், ஸ்ரீதர் ஆகியோர் சீனாவில் இருந்து ரூ.100 கோடி மதிப்பிலான நிலக்கரி இறக்குமதிக்கான ஆர்டர் கிடைத்துள்ளது என்றும், அதில் முதலீடு செய்தால் லாபத்தில்பங்கு தருவதாகவும்,ரூ.3 கோடி முதலீடு செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.
அவர்கள் சொல்வதை உண்மை என நம்பி ரூ.3 கோடி கொடுத்தேன். அதற்கு ரூ.6 கோடி தருவதாக ஆசை வார்த்தை கூறினர். ஆனால், நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாக தெரியவில்லை. என்னிடம் பெற்ற ரூ.3 கோடி பணத்தையும் அவர்கள் திருப்பித் தராமல் மோசடி செய்துவிட்டனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.
புகார் குறித்து, சென்னை மத்தியகுற்றப் பிரிவு கூடுதல் காவல் ஆணையர் செந்தில்குமாரி தலைமையிலான போலீஸார் வழக்குபதிந்து விசாரித்தனர். மணிவண்ண னிடம் ரூ.3 கோடி பெற்று மோசடிசெய்து, தலைமறைவாக இருந்த அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த சுரேஷை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.