

திருச்சி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளி உட்பட 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அப்போது, தண்டனை பெற்ற2 பேர் நீதிமன்றத்தின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவானைக்காவல் வெள்ளித்திருமுத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி(22). சுமை தூக்கும் தொழிலாளி. இவரும், அதே பகுதியைச்சேர்ந்த நண்பர்கள் வரதராஜன்(22), திருப்பதி(24) ஆகியோரும் சேர்ந்து 2020-ல் 14 வயது சிறுமிக்குபாலியல் தொல்லை அளித்துள்ளனர்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீவத்சன், குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்குஅரசுத் தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் எம்.கே.ஜாகீர் உசேன் ஆஜரானார்.
இதற்கிடையே, தீர்ப்பைக் கேட்ட பசுபதி, திருப்பதி ஆகியோர் நீதிமன்ற கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து, தற்கொலைக்கு முயன்றனர். காயமடைந்த இருவரையும் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.