கோவா தனியார் விடுதியில் 4 வயது மகனை கொன்ற பெங்களூரு பெண் சிஇஓ கைது

கோவா மாநிலம் மபுசா நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சுச்சானாவை அழைத்து சென்ற போலீஸார். (உள்படம் - சுச்சானா)
கோவா மாநிலம் மபுசா நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சுச்சானாவை அழைத்து சென்ற போலீஸார். (உள்படம் - சுச்சானா)
Updated on
1 min read

பெங்களூரு/பனாஜி: கோவா தனியார் விடுதியில் 4 வயது ஆண் குழந்தையை கொடூரமாக கொன்ற பெங்களூரு தனியார் நிறுவன சிஇஓ சுச்சானா சேத் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சுச்சானா சேத் (39). இவர் பெங்களூருவில் The Mindful AI Lab என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்கி, அதன் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். தனது கணவரை விட்டு பிரிந்த சுச்சானா சேத் தனது 4 வயது மகனுடன் பெங்களூருவில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி தன் மகனுடன் கோவாவில் உள்ள கண்டோலிம் நகருக்கு சென்றார்.

அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர், நேற்று முன்தினம் அறையை காலி செய்துவிட்டு டாக்ஸி மூலம் பெங்களூரு புறப்பட்டார். அவரது அறையில் ரத்தக் கறையை கண்டு அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள், சிசிடிவி பதிவுகளை பரிசோதித்தனர். இதில் சுச்சானா தனது மகன் இல்லாமல் செல்வதும் விமானத்தில் செல்லாமல் டாக்ஸி மூலம் செல்வதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து காலாகுட் காவல் நிலையத்திற்கு அவர்கள் தகவ‌ல் கொடுத்தனர்.

இதன் அடிப்படையில் சுச்சானா சேத்தை காலாகுட் காவல் ஆய்வாளர் நாயக் தொடர்பு கொண்டு மகன் குறித்து விசாரித்தார். அப்போது மகன் தனது நண்பரின் வீட்டில் இருப்பதாக கூறி, முகவரியை தெரிவித்தார். அந்த முகவரி தவறானது என தெரியவந்தது.

இதையடுத்து டாக்ஸி ஓட்டுநர் பிரதீப் குமாரை காவல் ஆய்வாளர் நாயக் நேரடியாகத் தொடர்புகொண்டு, உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு செல்லுமாறு கொங்கனி மொழியில் கூறினார். அதன்பேரில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா காவல் நிலையத்தை சென்றடைந்த காரை போலீஸார் ஆய்வு செய்தனர். சுச்சானா கொண்டு வந்த சூட்கேஸை போலீஸார் திறந்து பார்த்தபோது, அதில் 4 வயது மகன் கூர்மையான ஆயுதத்தால் கொல்லப்பட்டு, பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சுச்சானாவை கைது செய்து கோவா தனிப்படை போலீஸாரிடம் நேற்று ஒப்படைத்தனர். முதல்கட்ட விசாரணையில், 4 வயது மகனை பராமரிக்கும் விவகாரத்தில் சுச்சானா சேத்துக்கும் அவரது கணவர் வெங்கட்ராமனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. கண‌வரிடம் மகனை ஒப்படைக்க விரும்பாமல் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in