

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சி பிரமுகரை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் தருமபுரியில் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தருமபுரி மாவட்டம் செல்லியம்பட்டி அருகே உள்ள மணிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் ( 27 ). நாம் தமிழர் கட்சி பிரமுகரான இவர் திமுக-வைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது சமூக ஊடகத்தில் ( வலைதளங்களில் ) தவறான பதிவு மற்றும் அவதூறு செய்திகளை பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு செய்தி ஒன்றை ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் தனது பக்கத்தில் காளியப்பன் பதிவிட்டு உள்ளார்.
அதில், ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை, ஆனால் அதில் தொடர்புடைய காவல் துறை உயர் அதிகாரிக்கு பதவி உயர்வா? என்பதை மையமாக வைத்து அவதூறு பரப்பும் வகையில் கேலி சித்திரத்தை ( கார்ட்டூன் ) பதிவேற்றம் செய்துள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீஸார், தகவல் தொழில் நுட்ப சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காளியப்பன் மீது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, தருமபுரி விரைந்த சென்னை சைபர் க்ரைம் போலீஸார் அங்கு வைத்து காளியப்பனை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவரிடம், வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டார்.