

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பை சாகிநகா காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் இருவர் நேற்று முன்தினம் காலை சாகி விகார் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஓட்டல் ஒன்றில் இருந்து வெளியேறிய நைஜீரியாவைச் சேர்ந்தடேனியல் நேமெக் (38) என்பவர் போலீஸாரை கண்டதும் வேகமாக ஆட்டோவில் தப்பி சென்றார்.
அவரை சாகிநகா போலீஸார் விரட்டி சென்று பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 88 கேப்சூல்களில் உயர் ரக கோகைன் போதைப் பொருள் இருந்தது தெரிய வந்தது. நேமெக் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நவி மும்பையில் தங்கி உள்ளார். அவரிடம் முறையான பயணஆவணங்கள் இல்லை. நவி மும்பையில் உள்ள விநியோகஸ்தர் ஒருவருக்கு கோகைன் போதைப் பொருட்களை சப்ளை செய்து வந்துள்ளார்.
அவர் அளித்த தகவலின்படி சாகி நகா பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த வெனிசுலா நாட்டை சேர்ந்த ஜோயல் ரமாஸ் (19) என்ற இளைஞரை பிடித்து விசாரித்தனர். அப்போது, பிரேசிலில் இருந்து எத்தியோப்பியா சென்று அங்கிருந்து ஜோயல்ரமாஸ் மும்பை வந்துள்ளார். அப்போது வயிற்றில் 88 கேப்சூல்களில் கோகைன் கடத்தி வந்துள்ளார். மும்பை ஓட்டல் அறையில் கேப்சூல்களை எடுத்து நேமெக்கிடம் ஒப்படைத்துள்ளார் என்பது தெரிந்தது.
டேனியல் நேமெக்கின் செல்போனை போலீஸார் ஆய்வு செய்து அவருடன் தொடர்புடைய நபர்கள் பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும் இவர்களின் பின்னணியில் மிகப் பெரிய கடத்தல் கும்பல் செயல்படுவது தெரியவந்துள்ளது. ஜோயல் ரமாஸ் போன்ற இளைஞர்கள் போதைப் பொருட்களை கடத்தி வருவதற்காக இந்தியா அனுப்பப்படுவது தெரியவந்துள்ளது.