Published : 08 Jan 2024 04:10 AM
Last Updated : 08 Jan 2024 04:10 AM

பகலில் பேக்கரியில் வேலை... இரவு நேரங்களில் பைக் திருடிய 3 பேர் கைது @ புதுச்சேரி

புதுச்சேரி: புதுவையில் தங்கி வேலை செய்து கொண்டு, இரவு நேரங்களில் பைக்குகள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி கோரிமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் கோரிமேடு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இருசக்கர வாகனங்கள் திருட்டு நடைபெற்ற இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் 3 பேரின் உருவங்கள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் நேற்று சாரம் அவ்வை திடல் அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, வாகனத்தின் ஆவணங்களை சோதனையிட்டனர். அதில் அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு இருசக்கர வாகனம் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வேலன் ( 32 ) சிவகுமார் ( 20 ), மணிகண்டன் ( 30 ) என்பதும் தெரியவந்தது.

கடந்த சில மாதங்களாக இவர்கள் புதுச்சேரி லெனின் வீதியில் தங்கி பேக்கரியில் வேலை செய்துள்ளனர். இரவு நேரங்களில் வீட்டு வாசல்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை திருடி தமிழகத்துக்கு எடுத்துச் சென்று விற்பதற்காக பதுக்கிவைத்துள்ளது தெரியவந்தது. இதில் வேலன் மீது ஏற்கெனவே இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் அவர்கள் வசித்து வரும் வீட்டின் அருகே உள்ள இடங்களில் பதுக்கி வைத்திருந்த 17 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் வேலன் உட்பட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x