

சென்னை: போலீஸ் எனக்கூறி பணப் பரிமாற்ற அலுவலக உரிமையாளரிடம் ரூ.9.40 லட்சம் மதிப்புள்ள யூரோ கரன்சி வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை எழும்பூரைச் சேர்ந்தவர் ரியாசுதீன் (55). இவர், அதே பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பணப் பரிமாற்ற அலுவலகம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை 11.35 மணியளவில் தனது நண்பரிடம் கொடுப்பதற்காக ரூ.9.40 லட்சம் மதிப்புள்ள யூரோவை (ஐரோப்பிய நாடுகளின் கரன்சி) இருசக்கர வாகனத்தில் எடுத்துக் கொண்டு எழும்பூரில் இருந்து மண்ணடிக்கு சென்று கொண்டிருந்தார்.
சிந்தாதிரிப்பேட்டை கிழக்கு கூவம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரை இருசக்கர வாகனத்தில் இருவர் பின் தொடர்ந்து மறித்துள்ளனர். தங்களை போலீஸ் எனக்கூறி அறிமுகப்படுத்திக் கொண்ட இருவரும் ரியாசுதீனிடம், `உங்கள் மீது சந்தேகம் உள்ளது. எனவே, உங்களைச் சோதிக்க வேண்டும்' எனக்கூறி அவரை சோதனை செய்ததோடு, அவரது இருசக்கர வாகனத்தையும் சோதித்தனர்.
அதில், வைக்கப்பட்டிருந்த ரூ.9.40 லட்சம் மதிப்பிலான யூரோ கரன்சி நோட்டுகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதுகுறித்து உரிய விளக்கம் அளித்தும் போலீஸ் எனக் கூறியவர்கள் யூரோ கரன்சி நோட்டுகளை பறிமுதல் செய்து, அதை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் வந்து பெற்றுச் செல்லும்படி கூறிவிட்டுத் தப்பினர். கூடவே அவரது இருசக்கர வாகனத்தையும் பறித்துக் கொண்டு நழுவினர்.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு: அதிர்ச்சி அடைந்த ரியாசுதீன் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் சென்று விசாரித்த போதுதான் வந்தவர்கள் போலீஸ் இல்லை என்றும், வழிப்பறி கொள்ளையர்கள் என்பதும் தெரிந்தது. இதையடுத்து, அவர்கள் மீது அதே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் துப்பு துலக்கப்பட்டு வருகிறது.