

சென்னை: சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு பார்சல் மூலமாக அனுப்பப்பட்ட பொருட்களைக் கடந்த 2020 செப்.4 அன்று சோதனையிட்டனர். அப்போது சென்னை அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்த சையது சிராஜுதீன் பாட்ஷா என்பவர் பெயரில், பல்வேறு வெளிநாடுகளுக்கு 23 பார்சல்கள் பலரது முகவரியில் அனுப்பி வைக்கத் தயாராக இருந்தது.
அவற்றைப் பிரித்துப் பார்த்தபோது அதில் போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் சையது சிராஜுதீன் பாட்ஷாவையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ. ஜூலியட் புஷ்பா முன்பாக விசாரணைக்கு வந்தது. சுங்கத் துறை சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் என்.பி.குமார், ஏ.செல்லத்துரை ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அதையடுத்து நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.2.30 லட்சம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.