கூடா நட்பால் விபரீதம்: ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி @ சென்னை

கூடா நட்பால் விபரீதம்: ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி @ சென்னை
Updated on
1 min read

சென்னை: கூடா நட்புக்கு இடையூறாக இருந்த கணவரை ஆண் நண்பர் மூலம் மனைவி கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை, அயனாவரம், பெரியார் மெயின் ரோடு பகுதியில் பிரேம்குமார் (38) என்பவர் அவரது மனைவி சன்பிரியா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர், வில்லிவாக்கத்தில் பழைய பேப்பர் கடைநடத்தி வந்தார். இந்நிலையில், இவர் கடந்த 2-ம் தேதி அதிகாலை அயனாவரம், நியூ ஆவடி சாலை, ஆர்டிஓ அலுவலகம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது பின்னால் வந்த கார் மோதியதில், பிரேம்குமார் படுகாயம டைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் காரை அங்கேயே விட்டு தப்பிச் சென்றார்.

இந்த விபத்து குறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்தனர். விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து அதன் பதிவு எண்ணை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது அயனாவரம் செட்டித் தெருவைச் சேர்ந்த ஹரி என்ற ஹரிகிருஷ்ணன் (30) என்பது தெரியவந்தது. இவருக்கும், பிரேம்குமாரின் மனைவியான சன்பிரியாவுக்கும் இடையே கூடா நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான், இருவரும் சேர்ந்து தங்கள் உறவுக்கு தடையாக இருந்த பிரேம்குமாரை கொலை செய்து விட்டு, விபத்து என நாடகமாடி தப்பிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, ஹரிகிருஷ்ணனின் நண்பர் சரத்குமார் என்பவரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சரத்குமார் காரை ஓட்டிச் சென்று பிரேம்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு, அங்கு இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்த ஹரிகிருஷ்ணனுடன் தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து இந்த விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த ஹரிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமறைவாக உள்ள சன்பிரியா மற்றும் சரத்குமார் ஆகிய இருவரையும் தனிப்படை அமைத்து போலீ ஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in