இன்சூரன்ஸ் பணம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ திட்டம்: நண்பனை கொலை செய்த இளைஞர் உட்பட 3 பேர் கைது

சுரேஷ், ஹரி கிருஷ்ணன், கீர்த்திராஜன்
சுரேஷ், ஹரி கிருஷ்ணன், கீர்த்திராஜன்
Updated on
2 min read

மதுராந்தகம்: இன்சூரன்ஸ் பணத்தை பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக, நண்பனைக் கொலை செய்துவிட்டு, தான் இறந்ததாக ஊர் மக்களையும், இன்சூரன்ஸ் நிறுவனத்தையும் ஏமாற்ற நினைத்த நபர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த அல்லாணூர் பகுதியில், கடந்த செப்.16-ம் தேதி தீப்பற்றி எரிந்த குடிசை வீட்டிலிருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக, ஒரத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மேற்கண்ட சம்பவத்தில் டில்லிபாபு என்பவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (38) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக வேலூர் மாவட்டம், கலாஸ்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன்(32), தாம்பரம் அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த கீர்த்திராஜன் ஆகியோரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதுகுறித்து, போலீஸார் கூறியதாவது:

கைது செய்யப்பட்ட சுரேஷ் மற்றும் குடிசை வீட்டில் கருகிய நிலையில் சடலமாக கிடந்த டில்லிபாபு ஆகியோர் நண்பர்கள். சுரேஷ் சென்னையில் தனியார் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக இருந்துள்ளார். இவர் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விபத்து காப்பீடு திட்டத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புக்கு காப்பீடு செய்துள்ளார்.

இந்த காப்பீட்டுத் தொகையை, தான் உயிருடன் இருக்கும்போதே பெற வேண்டும் என்ற நோக்கத்தில், சுரேஷ் தன் வயதுடைய நபரை பல மாதங்களாகத் தேடி வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அயனாவரம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் தங்கியிருந்தபோது, அங்கு வாடகை வீட்டில் குடியிருந்த டில்லிபாபுவின் நினைவு வந்துள்ளது.

இதையடுத்து, திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் பகுதியில் வசித்த டில்லிபாபு வீட்டுக்குத் தனது கூட்டாளிகளான ஹரி கிருஷ்ணன், கீர்த்திராஜன் ஆகியோருடன் சுரேஷ் சென்றுள்ளார். பின்னர், கடந்த ஆண்டு செப்.9-ம் தேதி டில்லிபாபுவை அழைத்துக் கொண்டு வெளியில் செல்வதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் மேல்மருவத்தூர் வந்து, இருசக்கர வாகனத்தை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு பஸ்ஸில் புதுச்சேரி சென்று, அங்கிருந்து மீண்டும் பஸ்ஸில் அச்சிறுபாக்கம் அடுத்த அல்லாணூர் பகுதிக்கு வந்த நால்வரும் ஏற்கெனவே திட்டமிட்டபடி அங்குள்ள குடிசை வீட்டில் தங்கியுள்ளனர்.

அந்த வீட்டில் செப்.15-ம் தேதி அனைவரும் மது அருந்தினர். அப்போது, மேற்கண்ட மூவரும் ஏற்கெனவே திட்டமிடப்படி, டில்லிபாபு கொலை செய்துவிட்டு சடலத்தை குடிசை வீட்டில் வைத்து, வீட்டை தீயிட்டு எரித்ததாகக் கூறப்படுகிறது. உடனே, அங்கிருந்து தப்பிய நபர்கள் அரக்கோணம் அடுத்த திருவாலங்காடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர்.

இதனிடையே, குடிசை வீட்டில் எறிந்த நபர் சுரேஷ் என உறுதிப்படுத்தும் வகையில், அவரது அக்காவான மரிய ஜெய(40) என்பவர் ஒரத்தி போலீஸில் புகார் அளித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிந்து, சடலத்தைப் பெற்று அயனாவரம் பகுதியில் அடக்கம் செய்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, சுரேஷ் இறந்து விட்டதாக அப்பகுதி முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட டில்லிபாபுவின் அம்மா லீலாவதி, நண்பர்களுடன் வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்ற மகன் குறித்து தகவல் ஏதும் இல்லை எனக்கூறி, எண்ணுார் காவல் நிலையத்திலும் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்துள்ளார்.

இதையடுத்து, போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில், டில்லிபாபுவின் அண்ணன் பழனி மற்றும் லீலாவதியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது 3 நபர்களுடன் சென்றிருப்பதை போலீஸார் அறிந்தனர்.

இதையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த மூவரும் அரக்கோணம் பகுதியில் தங்கியிருப்பதை அறிந்து, அவர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், இன்சூரன்ஸ் தொகையான ஒரு கோடி ரூபாய் பெறும் நோக்கில், நண்பர்களான கீர்த்தி ராஜன் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம், சுரேசுக்கு ரூ.60 லட்சம் எடுத்துக் கொள்ளலாம் எனத் திட்டமிட்டு, டில்லிபாபுவை கொலை செய்து குடிசை வீட்டில் வைத்து எரித்திருப்பது தெரிந்தது.

இதையடுத்து, மேற்கண்ட 3 பேரையும் மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். சுரேஷ் ஏற்கெனவே வேறு ஒரு நபர் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகிக் கேட்டபோது, “இந்த வழக்கை தற்கொலை வழக்காக போலீஸார் பதிவு செய்துள்ளதால், பணத்தைப் பெற முடியாது” என்று கூறிவிட்டதாகத் தெரிகிறது.

இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பரையே கொலை செய்து இளைஞர் ஒருவர் போலீஸில் சிக்கியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in