

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் சுற்றுலா பேருந்து மீது லாரி மோதியதில் சுற்றுலா பயணிகள் 14 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அசாம் மாநில டேர்கான் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து தொடர்பாக காவல்துறை தரப்பில், இன்று அதிகாலை 3 மணியளவில் சுற்றுலா பயணிகள் 45 பேருடன் பாலிஜானில் இருந்து அத்கேலியா நோக்கி ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அவர்கள் சேர வேண்டிய இடத்தை நெருங்கியிருந்த நேரத்தில் நிலக்கரி ஏற்றிவந்த லாரி ஒன்று பேருந்தில் மீது நேருக்கு நேர் மோதியது. லாரி மார்கரிட்டா பகுதியில் இருந்து வந்துள்ளது. லாரி மோதியதில் சுற்றுலா பேருந்தில் இருந்த 45 பேரில் 14 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 27 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக வழக்கு பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம், 'இந்தியாவில் சாலை விபத்துகள்-2022' என்ற ஆண்டறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டது.
இந்த அறிக்கையின்படி, 2022-ம் ஆண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 4,61,312 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன, இதில் 1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர். 4,43,366 பேர் காயமடைந்துள்ளனர். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது விபத்துகளின் எண்ணிக்கை 11.9 சதவீதமும், இறப்புகளின் எண்ணிக்கை 9.4 சதவீதமும், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 15.3 சதவீதமும் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. அதிவேகம், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்காதது உள்ளிட்டவை இந்த விபத்துகளுக்குக் காரணங்களாக அமைந்துள்ளன.
சாலை விபத்துகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2022-ம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 64,105 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. 2018-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்துள்ளது. 2022-ம் ஆண்டைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தில் மத்தியப் பிரதேசமும், மூன்றாவது இடத்தில் கேரளாவும், நான்காவது இடத்தில் உத்தரப் பிரதேசமும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.