

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே வேன் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 20 பேர் ஆன்மிகச் சுற்றுலா ரயில் மூலம் ராமேசுவரம் வந்தனர். பின்னர் அங்கிருந்து டூரிஸ்ட் வேனில் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி புறப்பட்டனர்.
அவர்கள் பயணித்த வேன் தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வல்லநாடு துப்பாக்கி சுடுதளம் அருகே நேற்று முன்தினம் அதிகாலை வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரே விதிகளை மீறி தவறான பாதையில் வந்த டிப்பர் லாரி, வேன் மீது மோதியது.
இதில், வேனில் பயணம் செய்த உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் ரக்நாத் பகுதியைச் சேர்ந்த சுமன் (32), பார்வதி (40) மற்றும் ஒரு வயதுபெண் குழந்தை உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து முறப்பநாடு போலீஸார் விசாரிக்கின்றனர்.