Published : 01 Jan 2024 04:02 AM
Last Updated : 01 Jan 2024 04:02 AM
தூத்துக்குடி / திருநெல்வேலி: திருநெல்வேலியில் இளைஞர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் அருகே சொந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் ராமசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்து பெருமாள் (27). இவர் திருநெல்வேலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை முத்துபெருமாள் திருநெல்வேலி ரெட்டியார்பட்டி சாய்பாபா கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் அவரை வழிமறித்து வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக திருநெல்வேலி பெருமாள்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்து பெருமாள் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், அவரது சொந்த ஊரான புளியங்குளம் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு திருச்செந்தூர்- திருநெல்வேலி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுத்து நின்றன. தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன், திருநெல்வேலி எஸ்பி சிலம்பரசன் மற்றும் போலீஸார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பின் மறியல் போராட்டத்தை பகல் 12 மணியளவில் கிராம மக்கள் கைவிட்டனர். இருப்பினும் பொதுமக்கள் அந்த இடத்தை விட்டு கலைந்து செல்லாமல் தொடர்ந்து சாலையோரத்திலேயே அமர்ந்திருந்தனர். வாகனங்கள் அனைத்தும் கொங்கராயகுறிச்சி வழியாக திருப்பிவிடப்பட்டன. மாலை வரை வாகனங்கள் மாற்றுப்பாதையில் தான் சென்றன. ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் தெற்கு காரசேரி பகுதியைச் சேர்ந்த முத்து கிருஷ்ணன், இசக்கி பாண்டி ஆகியோரை திருநெல்வேலி பெருமாள்புரம் போலீஸார் கைது செய்தனர். உய்க்காட்டான் என்பவரை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT