

திருவண்ணாமலை: கத்தியுடன் சுதந்திரமாக உலா வரும் ரவுடி கும்பலால் திருவண்ணாமலையில் சட்டம்-ஒழுங்கு பாது காப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆன்மிக நகரம் ‘திருவண்ணா மலை’. உலக பிரசித்திப் பெற்ற அண்ணாமலையார் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தமிழக மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். தமிழக பக்தர்களை போன்று ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருந்து பக்தர்கள் தினசரி வருகின்றனர்.
“ஆன்மிக பூமி” என போற்றப்படும் திருவண்ணாமலையில் “உதிரம் கொட்டும்” நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, முக்கிய காரணம் சாராயம், மதுபாட்டில் விற்பனையில் தொடங்கி கஞ்சா விற்பனை வரை அமோகமாக நடைபெறுவதுதான் என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு தடையின்றி கஞ்சா கடத்தி வரப்படுகிறது. ரயில், இரு சக்கர மற்றும் சரக்கு வாகனம், சொகுசு கார் மற்றும் பேருந்துகளில் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. திருவண்ணாமலை நகருக்கு இணையாக கிரிவலப் பாதையிலும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது.
கஞ்சா போதையில் குற்றச்செயல்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. புறவழிச் சாலையில் பாமக ஒன்றிய கவுன்சிலர் உட்பட இரண்டு பேர் மீது கொலைவெறி தாக்குதல், காவலாளியை முகம் சிதைத்து கொடூரமாக கொலை செய்தது, ஆவின் முன்பு திமுக பிரமுகரை வெட்டி கொலை செய்தது என அடுத்தடுத்து குற்றச்செயல்கள் நடைபெற்றுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில், வாகனங்களுக்கு நேற்று முன்தினம் இரவு பெட்ரோலை நிரப்பிக்கொண்டு பணம் தரமறுத்ததை கண்டித்த மேலாளர் ரகுராமனை, 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளது.
இச்சம்பவம், திருவண்ணாமலையில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்நிலை தொடர்ந்தால், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டு விடும். குற்றச்செயல் நடந்தபிறகு கைது நடவடிக்கை என்பதை விட, சமூக விரோதிகளை முன்கூட்டியே களையெடுக்க வேண்டும்.
மேலும், புறவழிச்சாலையில் இரவு நேரங்களில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களும் தொடர்கின்றன. இரவு 7 மணிக்கு பிறகு செல்பவர்களின் நகை, கைபேசி மற்றும் உடமை களுக்கு பாதுகாப்பு இல்லை. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் பணி முடிந்து செல்லும் செவிலியர்கள் உள்ளிட்டோர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
கிராமப்புற பகுதியில் இருந்து கோயில் மற்றும் கடைக்கு வந்துவிட்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பும் மக்களிடம் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இவர்களில் பலர் புகார் கொடுக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது. அப்படியே புகார் கொடுத்தாலும், விசாரணைக்கு உட்படுத்தாமல் காவல் துறையினர் தட்டிக்கழிப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
கஞ்சா விற்பனை செய்பவர்கள், மக்களை அச்சுறுத்தும் ரவுடிகளின் பட்டியல் அனைத்தும் ‘நுனி விரலில்’ இருந்தும், அதிரடி நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் முன்வரவில்லை.
மென்மையான போக்கு கடைபிடிக்கப்படுவதால், சர்வ சுதந்திரமாக சமூக விரோத கும்பல் சுற்றி வருகின்றன. இந்த கும்பலுடன் இணக்கமாக உள்ளவர்களும் காவல்துறை பணியில் உள்ளனர். இவர்களுக்கு, அரசியல் செல்வாக்கும் உள்ளதால், கடுமையான நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மக்களை பாதுகாக்க சமூக விரோத கும்பலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க எஸ்.பி. கார்த்திகேயன் முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.