Published : 25 Dec 2023 07:20 AM
Last Updated : 25 Dec 2023 07:20 AM

தாம்பரம் | காதலிக்க மறுத்ததால் இன்ஜினியர் கொலை: திருநம்பியாக மாறிய பள்ளித் தோழி கைது

நந்தினி, வெற்றிமாறன்

தாம்பரம்: தாழம்பூர் அடுத்த பொன்மார்கிராமத்தில் உள்ள வேதகிரி நகரில்இளம் பெண்ணை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ததாக, மதுரையைச் சேர்ந்த வெற்றிமாறன் (எ) பாண்டி மகேஸ்வரியை தாழம்பூர் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் அடுத்த பொன்மார், வேதகிரி நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெண் ஒருவர் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டும் உடலில் ஆங்காங்கே வெட்டுக்காயங்களுடன், தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அப்பகுதிமக்கள், தாழம்பூர் போலீஸாருக்குதகவல் தெரிவித்து, அந்த பெண்ணை சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்தார். இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், வழக்குப் பதிவு செய்து தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அப்பெண் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரின் மகள்நந்தினி(24) எனத் தெரிந்தது. மேலும், இவர் அதே மாவட் டத்தைச் சேர்ந்த பாண்டி மகேஸ்வரி(26) என்பவருடன், பத்தாம் வகுப்பிலிருந்து தோழியாகப் பழகி வந்துள்ளார்.

பிறந்தநாளில் சம்பவம்: பாண்டி மகேஸ்வரி கடந்தசில ஆண்டுகளுக்கு முன்புதிருநம்பியாக மாறி வெற்றி மாறன் எனப் பெயரை மாற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 8 மாதங்களாகச் சென்னை, துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் இருவரும் பணிபுரிந்து வந்துள்ளனர். நந்தினியை காதலிப்பதாக வெற்றிமாறன் கூறியதால், கடந்தசில நாட்களாக நந்தினிஅவரிடம் பேசுவதைத் தவிர்த்து, வேறுநபர்களுடன் பழகியதாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த வெற்றிமாறன், நேற்று நந்தினிக்கு பிறந்தநாள் என்பதால், பரிசு தருவதாகக் கூறி அவரை வெளியே அழைத்துச் சென்றுபல்வேறுஇடங்களில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. பின்னர், கடைசியாக பொன் மார் பகுதிக்கு வந்தபோது, நந்தினியை தாக்கி கை, கால்களைக் கட்டி, பெட்ரோல் ஊற்றி கொலை செய்துள்ளதாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தாழம்பூர் போலீஸார் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக விரைவாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்த தாழம்பூர் போலீஸாருக்கு, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் பாராட்டு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x