

புதுடெல்லி: உ.பி. பிரயாக்ராஜில் உள்ள யுகோ வங்கியில் 2018ஏப்ரல் மாதம் லாக்கரை உடைத்துபணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து வங்கி இழப்பீடு வழங்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் அளித்த புகாரில், “பிரயாக்ராஜில் உள்ள யுகோ வங்கியில் 2018-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது. வங்கியில் காஸ் சிலிண்டர் உதவியுடன் லாக்கர்கள் வெட்டப்பட்டு, அவற்றிலிருந்த பணம், நகைகள் கொள்ளையடிப்பட்டன. வங்கிக்கு தொடர்ச்சியாக 3 நாள் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியது. வங்கியில் போதியபாதுகாவலர்கள் பணி அமர்த்தப்படவில்லை. இந்தப் பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தியே வங்கியினுள் காஸ் சிலிண்டரை கொண்டு வந்து கொள்ளை அடித்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டது.
கொள்ளை நடந்த பிறகும், லாக்கர் பயன்பாட்டுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கி தரப்பில் கட்டணம் வசூலித்ததாகவும் புகார்கள் வந்தன.
இந்த வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம், ‘‘வங்கியில் போதிய பாதுகாப்பு கட்டமைப்பு இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பணம், நகையை இழந்த வாடிக் கையாளருக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்’’ என்று வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.