

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலுக்கு சபரிமலை சீஸன் மற்றும் பண்டிகை காலம் தற்போது ஐயப்ப பக்தர்ள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
பக்தர்களை போலீஸார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகே கோயி லுக்குள் தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கின்றனர்.
துப்பாக்கியுடன் புகுந்தார்: இந்நிலையில் நேற்று வடமாநிலத்தை சேர்ந்த ஒரு பக்தர் பகவதி அம்மன் கோயிலுக்கு வந்தார். அவரிடம் கோயில் ஊழியர்கள் சட்டையை கழற்றிவிட்டு தரிசனத்துக்கு செல்லுமாறு கூறினர். அதன்படி கோயிலுக்குள் செல்ல முயன்ற அவர் மீது போலீஸாருக்கு மீது சந்தேகம் ஏற்பட்டது. மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் அவரை சோதனை செய்த போது இடுப்பில் அவர் கைத்துப்பாக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி மகேஷ்குமார் மற்றும் கன்னியாகுமரி போலீாஸார் கோயிலுக்கு விரைந்து வந்து, அந்த நபரிடம் விசாரணை நடத்தினா்.
எம்எல்ஏவின் சகோதரர்: அப்போது அவர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ தேவேந்திர பட்டேலின் சகோதரர் நிரஞ்சன் பட்டேல் (44) என்பதும், தனது பாதுகாப்புக்காக இந்தியா முழுவதும் அவர் துப்பாக்கியை எடுத்துச் செல்வதற்கான உரிமம் பெற்றுள்ளதும் தெரியவந்தது.
அவரிடம் போலீஸார் கைத்துப்பாக்கியுடன் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்று கூறியதையடுத்து துப்பாக்கியை அங்குள்ள பொருட்கள் பாதுகாக்கும் அறையில் வைத்துவிட்டு அவர் சாமி தரிசனம் செய்ய சென்றார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
கூட்டம் அதிகம் வரும் காலங்களில் பகவதி அம்மன் கோயில் நுழைவுப் பகுதியில் மெட்டல் டிடெக்டெர் வாசல் அமைத்து, அதன் வழியாக சோதனையிட்ட பிறகே பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிப்பது வழக்கம். ஆனால், இந்தமுறை மெட்டல் டிடெக்டர் வாசல் இதுவரை அமைக்கவில்லை. இதன் காரணமாகவே பகவதி அம்மன் கோயிலில் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே, இனியாவது பாதுகாப்பை போலீஸார் பலப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.