Published : 23 Dec 2023 06:20 AM
Last Updated : 23 Dec 2023 06:20 AM

கோவை | வாங்காத கடனுக்காக துன்புறுத்தப்பட்ட வாடிக்கையாளர்: தனியார் நிதி நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்

கோவை: வாங்காத கடனுக்காக வாடிக்கையாளரை தொடர்ந்து துன்புறுத்திய தனியார் நிதி நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவை புலியகுளத்தைச் சேர்ந்த ஏ.அப்துல்கரீம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க கடன் பெற்று, அதனை முழுமையாக திருப்பி செலுத்திவிட்டேன். அதன்பிறகு, கடன் நிலுவையில்லா சான்றையும் நிதி நிறுவனத்திடம் இருந்து பெற்றுவிட்டேன். இந்நிலையில், நான் பெற்ற தனிநபர் கடனை திருப்பி செலுத்துமாறு நிதி நிறுவனம் தரப்பில் இருந்து எனக்கு எஸ்எம்எஸ், செல்போன் அழைப்புகள் வந்தன. இதையடுத்து, கடந்த 2020 மார்ச் 3-ம் தேதி நிதி நிறுவனத்தின் குறைதீர் மையத்தில் புகார் தெரிவித்தேன். இருப்பினும், தொடர்ந்து எனக்கு அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து, ரேஸ்கோர்ஸில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்துக்கு சென்று, அங்கிருந்த மேலாளரிடம் புகார் தெரிவித்தேன். உடனே, ஆவணங்களை சரிபார்த்த மேலாளர், 2018 மார்ச் 14-ம் தேதி நான் தனிநபர் கடனாக ரூ.1.10 லட்சம் பெற்று, அதனை முழுமையாக திருப்பி செலுத்தாமல் உள்ளதாக தெரிவித்தார். ஆனால், அவ்வாறு எந்த கடனையும் நான் பெறவில்லை. இதையடுத்து, நிதி நிறுவனத்தின் வழக்கறிஞர் மூலம் எனக்கு ஒரு நோட்டீஸ் வந்தது. அதில், ரூ.52,894-ஐ நான் வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்த தொகையை கேட்டு, நிதி நிறுவனத்தின் பிரதிநிதிகள் பல முறை எனது வீட்டுக்கு வந்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கினர். ஒவ்வொரு முறை நான் விளக்கம் அளித்தும், எந்த பயனும் ஏற்படவில்லை.

சிபில் ஸ்கோர் பாதிப்பு: இந்நிலையில், 2021 ஜனவரியில் கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் கடனுக்காக விண்ணப்பித்தேன். ஆனால், சிபில் ஸ்கோர் பாதித்திருப்பதாக கூறி கடன் வழங்க மறுத்துவிட்டனர். கடனை செலுத்த தவறியவர் பட்டியலில் நான் இருந்ததால், எனக்கு இந்த நிலை ஏற்பட்டது. எனவே, எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், சேவை குறைபாடுக்கு உரிய இழப்பீடு வழங்க நிதி நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ஆர்.தங்கவேல், உறுப்பினர்கள் பி.மாரிமுத்து, ஜி.சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: வாங்காத கடனுக்காக மனுதாரருக்கு அழைப்புகள் வந்துள்ளன. உண்மையில், ரூ.1.10 லட்சம் கடனை, மற்றொரு வாடிக்கையாளரான கிறிஸ்டோபர் லியோ என்பவர் பெற்றுள்ளார். அதனை 2019 பிப்ரவரி முதல் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். ஆனால், மனுதாரரின் விவரங்கள், கிறிஸ்டோபர் லியோ வாங்கிய கடன் விவரத்துடன் தவறுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

இது, அவரது சிபில் ஸ்கோரை பாதித்துள்ளது. கடன் பெற்றவரின் விவரத்தை வங்கிக் கணக்குடன் இணைக்கும்போது, நிதி நிறுவனம் கவனமாக செயல்பட்டிருக்க வேண்டும். மேலும், தங்கள் கவனத்துக்கு இந்த பிரச்சினை வந்தபிறகாவது சரிசெய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாதது முறையற்ற வர்த்தகம், சேவை குறைபாடாகும். எனவே, மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், சேவை குறைபாடு, முறையற்ற வர்த்தகத்துக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரத்தை தனியார் நிதி நிறுவனம் வழங்க வேண்டும். அதோடு, சிபில் பிரச்சினையை தீர்க்க கடன் செலுத்த தவறியவர்கள் பட்டியலில் இருந்து மனுதாரர் பெயரை நீக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x