

சென்னை: செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் ஆந்திர மாநில போலீஸாரால் கைது செய்யப்பட்ட சென்னை தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (45). சென்னைசிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய குற்றப் பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றினார். அந்த காவல் நிலைய ஆய்வாளருக்கு வாகன ஓட்டுநராகவும் இருந்தார். இந்நிலையில், வழக்கம்போல் கடந்த 17-ம் தேதி இரவு சந்திரசேகர் பணியாற்றிவிட்டு ஓய்வெடுக்கச் சென்றார்.
இந்நிலையில், மறுநாள் ஆந்திர மாநிலம், சத்தியவேடு காவல் நிலைய போலீஸார் சந்திரசேகர் மற்றும் 14 பேரை செம்மரம் கடத்தியதாக ஆந்திராவில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 டன் செம்மரக்கட்டைகள், 2 கார்கள், ஒரு சரக்குவாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சந்திரசேகரை, சென்னை காவல் ஆணையர்சந்தீப் ராய் ரத்தோர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். இவ்விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.