

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள மூப்பனார் மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள், வாகனத்தை தாறுமாறாக ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாகச் சென்ற பெண் மீது அந்த வாகனம் லேசாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதை அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த உளவுப் பிரிவு உதவிகாவல் ஆய்வாளர் ஒருவர் பார்த்துள்ளார். இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துவிட்டு, சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது, அவர்கள் போதையிலிருந்தது தெரிந்தது.
இதையடுத்து உதவி ஆய்வாளர், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாவியை எடுத்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்து, காயம் அடைந்த உதவி ஆய்வாளரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தப்பிய இளைஞர்கள் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என போலீஸார் விசாரணை நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் பிடிபட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரது நண்பரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.