

சென்னை: நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு ரிப்பன் மாளிகை எதிரே நடந்து சென்று கொண்டிருந்த ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தடுக்க முயன்ற மேலும் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை சென்ட்ரல், வால்டாக்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (40). இவர் மீதுபல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காந்திநகர் பேருந்து நிறுத்தம் அருகே கொலைசெய்யப்பட்ட ரவுடி சேட்டு என்பவர்கொலை வழக்கிலும் சிக்கி இருந்தார். அண்மையில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில், இவர் வழக்கு ஒன்றுக்காக சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள அல்லிகுளம் நீதிமன்றத்துக்கு நேற்று வந்திருந்தார்.
பின்னர், அங்கிருந்து உறவினர்களுடன் ரிப்பன் மாளிகை எதிரே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர்கொண்ட கும்பல் பிரேம் குமாரை குறி வைத்து சரமாரியாக வெட்டியது. தடுக்க முயன்ற அவரது உறவினர் மற்றும் நண்பருக்கும் வெட்டு விழுந்தது. இதில், பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்து பெரியமேடு காவல் நிலைய போலீஸார் சம்பவஇடம் விரைந்து பிரேம் குமார் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம்அடைந்த உறவினர்கள் வசந்தகுமார்,குரு இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இக்கொலை தொடர்பாக பெரியமேடு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்துவருகின்றனர். ரவுடி சேட்டு கொலைக்குபழிக்கு பழியாக தற்போது பிரேம்குமார் தீர்த்துக் கட்டப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.