Published : 19 Dec 2023 06:09 AM
Last Updated : 19 Dec 2023 06:09 AM
சென்னை: பின்னி மில்லுக்கு சொந்தமான இடத்தை அளக்க சென்றபோது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, திமுக பிரமுகர்கள் உட்பட மேலும் சிலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை திருவிக நகர் பல்லவன் சாலை பகுதியில் பின்னி மில் நிறுவனத்துக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது. இந்நிலையில், பின்னி மில் சார்பில் அதன் நிர்வாகிகள் மற்றும் தி.நகர் பகுதியை சேர்ந்தவழக்கறிஞர் ஒருவர் உள்ளிட்டோர் அந்த நிலத்தை அளப்பதற்காக அண்மையில் சென்றுள்ளனர். அப்போது, அங்கு 20-க்கும் மேற்பட்டோர் திரண்டுள்ளனர். அவர்களில் 3 பேர் திமுக பிரமுகர்கள் எனகூறப்படுகிறது. அவர்கள் வழக்கறிஞர் உள்ளிட்ட நிலத்தை அளக்க வந்தவர்களிடம், இந்த நிலம் திருவிகநகர் குடியிருப்போர் நலச் சங்கத்துக்கு சொந்தமானது. எனவே, சம்பந்தப்பட்ட நிலத்தை அளக்க கூடாதுஎன வாக்குவாதம் செய்தனராம்.
இதனால், இரு தரப்பினரிடையேதகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த திமுகவினர் மற்றும் அவர்களுடன் வந்த சிலர் நிலத்தை அளக்க வந்த வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் திருவிகநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் திமுக பிரமுகர்கள் 3 பேர் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே திருவிக நகர் குடியிருப்போர் சங்கத்தினர் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது அதே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், திருவிக நகர் வாசிகளுக்காக சென்னை மாநகராட்சியால் பூங்கா கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை அளக்க முயன்றதை சங்க உறுப்பினர்கள் சிலர் தட்டி கேட்டதாகவும் இதனால் வழக்கறிஞர் உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தனர். அதன்பேரில் போலீஸார் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT