

சென்னை: சென்னை மடிப்பாக்கம், சீனிவாசன் நகரில் உள்ள ராம்நகர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி பாட்ரிகாபெல்லார்டு (71). இவர் கடந்த 16-ம் தேதி வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பாட்ரிகா பெல்லார்டு கழுத்திலிருந்த 5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினர். தனிப்படை போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது கள்ளக்குறிச்சி மாவட்டம்,வானாபுரம் பகுதியைச் சேர்ந்தசுபாஷ் சந்திரபோஸ் (23), அவரது கூட்டாளிதிருவாரூர் மாவட்டம், களப்பால் கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார்(28) என்பது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 பவுன் தங்க நகை, குற்றச் செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் தனியாக நடந்துசெல்லும் வயதான பெண்களை குறிவைத்து நகைகள் பறித்து செல்வதை வழக்கமாக கொண்டவர்கள் என தெரியவந்தது என போலீஸார் கூறினர்.