

மதுரை: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன், 10 நாள் போலீஸ் காவல் முடியும் முன்பே மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுசேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்களை அறிவித்து, வாடிக்கையாளர்களிடம் பணம் மோசடி செய்த புகாரில் பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர்கள் மதன், அவரது மனைவி கார்த்திகா உள்ளிட்டோர் மீது திருச்சி பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
இதையடுத்து, மதுரையில் உள்ள பொருளாதார முதலீட்டுக் குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் டிச.6-ம் தேதி மதன்சரணடைந்தார். அதைத் தொடர்ந்து, அவரது மனைவி கார்த்திகாவை டிச.13-ம் தேதி திருச்சியில் போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்ட மதனை 10 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வந்தனர்.
அவரது காவல் டிச.21-ம் தேதி வரை இருந்த நிலையில், அவரிடம் நடத்திய விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிச.16-ம் தேதி அவரை மதுரை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.