

கோவை: கோவை வெற்றி லேஅவுட்டைச் சேர்ந்தவர் ராஜசேகர்(43). இன்ஜினியரான இவர், மணப்பெண் தேடி ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் தனது சுய விவரங்களை பதிவு செய்திருந்தார். சில நாட்களில் ராஜசேகரை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்ட பெண், தனது பெயர் சிவசங்கரி எனஅறிமுகப்படுத்திக் கொண்டார். தான் லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிவதாகவும், விரைவில் இந்தியா வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நேரில் பார்த்து பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இருவரும் வாட்ஸ்அப் மூலம் அடிக்கடி குறுஞ்செய்தி பரிமாறிக்கொண்டனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ராஜசேகரை தொடர்பு கொண்ட சிவசங்கரி, தான் இந்தியா வந்துள்ளதாகவும், தன்னிடம் இங்கிலாந்து கரன்சி இருந்ததால் டெல்லி விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பிடித்துள்ளனர். இங்கிலாந்து கரன்சியை மாற்றி, இந்திய பணத்தில் வரி செலுத்தினால் தான் தன்னை விடுவிக்க முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, தான் கூறும் வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பினால், வெளியே வந்ததும் இங்கிலாந்து கரன்சியை இந்திய பணமாக மாற்றி திருப்பி தருவதாக தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய ராஜசேகர், அந்த இளம்பெண் கூறிய வங்கி கணக்குக்கு 7 தவணைகளாக ரூ.8 லட்சத்து 16 ஆயிரம் அனுப்பியுள்ளார். அதன் பின்னர், ராஜசேகரால் அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது மொபைல் போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. அப்போது தான் மோசடி செய்யப்பட்டது ராஜசேகருக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.